Pages

Wednesday, September 11, 2013

சினிமா விமர்சன பதிவு எழுதுவது எப்படி

சினிமா விமர்சன பதிவு எழுதுவது எப்படி- பாகம் 1

ஊரு உலகத்துல இருக்கிற எல்லா பதிவரும் சினிமா விமர்சனம் பண்றாங்க ஏன் நாம எழுத கூடாதுன்னும் , அதை எப்படி எழுதுறதுன்னும், யோசிச்சுகிட்டு என்னைப்போலவே அண்ணாந்து மோட்டுவளையத்தை பார்த்துகிட்டு இருப்பவர்களுக்காக .....

முதலில் சினிமாவுக்கு போகும்போது ஒரு குயர் ரூல்டோ அல்லது அன்ரூல்டு நோட்டு கைவசம் அல்லது பை (Bag) வசம் அவசியம் அப்போதான் முக்கியமான சீன்களை (நோ டபுள் மீனிங் ) குறித்து வைத்துக்கொள்ள உதவும் மேலும் உடன்  சக பதிவரையோ, அல்லது நண்பர்களையோ கூட்டி போகணும் அப்போதான் நாலு பத்திக்கு சினிமாவுக்கு சென்றபொழுது அப்படின்னு ஒப்பேத்தமுடியும்
அப்புறம் ஒரு வேளை கூட வந்தவர் சக பதிவர் எனில் அவரிடம் இடைவேளையின் போதே நான் இந்த படத்துக்கு விமர்சனம் எழுத போறேன் நீ தயவு செய்து எழுதவேண்டாம் என்று உங்கள் வசதிகேற்ப கட்லேட்டோ, கம்மரகட்டோ வாங்கி கொடுத்து சூடம் ஏத்தி சத்தியம் வாங்கி கொள்ள வேண்டும்

பிறகு தியேட்டர் பெயர்,  தியேட்டரில் எத்தனை பேர் வந்து இருக்கிறார்கள் ,  , அதில் எத்தனை பேர் காதல்ஜோடிகள் என்பது போந்தார மேலாதிக்க தகவல்களை குறித்து கொள்ளவேண்டும் , சினிமா பதிவை எழுதும் முன் நாம் சினிமா பார்க்க வீட்டில் இருந்து கிளம்பியதை ஒரு பதிவாகவும், நிரம்பி வழியும் போக்குவரத்து நெரிசலை தாண்டி  முட்டு சந்துக்குள் புகுந்து ஒருவழியாக தியேட்டர் சென்றதை ஒரு பதிவாகவும் தியேட்டர் சென்று  டிக்கெட் வாங்கியதை  ஒரு பதிவாகவும் , மொத்தம் நான்கு அல்லது ஐந்து பதிவுகள் தேத்திவிடுவது நலம், அப்படியே தியேட்டர் வாசலில் ஒரு போட்டோவும் , போஸ்டர் முன்னாடி ஒருபோட்டோவும் , டிக்கெட் கிழிப்பவரின் அருகில் நின்று ஒரு போட்டோவும் எடுத்து வைத்துக்கொண்டு அதை அந்தந்த பார்ட் பதிவுகளில் பிரசுரிக்க வேண்டும்,மிகமுக்கியமாய்  மொக்கை படங்களையும் பார்த்து பழகி கொள்ள வேண்டும் அமேசிங் , எக்ஸ்ட்ராடினரி , போன்ற மேல்தட்டு வார்த்தைகளையும், உங்களுக்கு தெரிந்த பின்நவீனத்துவ வார்த்தைகளையும் போட்டு நிரப்ப பழகிகொள்ளுதல் அவசியம் மேலும் நமது ஊரில் தடை செய்யப்பட்ட படங்களை அண்டை மாநிலங்களில் சென்று பார்க்கும் முனைப்பு அவசியம் வேண்டும் அப்போதுதான் பதிவு உலகம் நம்மை உற்றுநோக்க ஆரம்பிக்கும்,

பிறகு படம் ஆரம்பிப்பதற்கு முன்னால் போடப்படும் விளம்பரங்களின் எண்ணிக்கையும் குறித்துக்கொண்டு மறக்காமல் பிள்ளையார் சுழியாய் திரு.முகேஷ் (புகையிலை பயன்படுத்தி வீரமரணம் அடைந்த) அன்னாருக்கு ஒரு இரங்கற்பா வாசித்து விட்டு விமர்சனம் எழுத தொடங்கவேண்டும் எழுதுவதற்கு முன்னால் எப்போதும் மறக்காமல் கீழ் வரும் மந்திரத்தை நினைவில் நிறுத்தி கொள்ளவேண்டும்

ஊரு உலகம் ஆஹா, ஓகோன்னு புகழாரம் சூட்டுகின்ற படத்தை நாம் அது நொள்ளை இது நொள்ளை என்று கழுவி கழுவி ஊத்த வேண்டும்
எல்லோரும் கழுவி கழுவி ஊத்தும் படத்தை நாம் உலக சினிமாவென்று கொண்டாட வேண்டும்

மறக்காமல் இதை நினைவில் நிறுத்திக்கொண்டு எழுதஆரம்பிக்க வேண்டும் ,

- தொடரும் 

அன்புடன்

சசிமோஹன் குமார் ;-)



Thursday, September 5, 2013

ஓ நண்பனே ......

அன்பின் நண்பர் திரு .கவிதை வீதி சௌந்தர் அவர்களுக்கு ......

   தங்கள் நண்பன் என்ற முறையில் இணையத்தில் இவ்விரண்டு நாட்களாக நடந்து வரும் தங்களின் பதிவின் பொருட்டு ஏற்பட்டுள்ள ஒரு சிறு சச்ச்சரவின் பால் எனது பதிவினை உங்கள் பார்வைக்கு சமர்பிக்கிறேன்

முதலில் ஒரு விசயத்தை எனக்கு கூறுங்கள் நீங்கள் பதிவிட்டுள்ள  இந்த பதிவானது முற்றிலும் உங்கள் மனசாட்சிக்கு விரோதமாக தானே எழுதி உள்ளீர்கள்? இப்படிதான் எழுத வேண்டுமென்று பதிவர் சந்திப்பின் அரங்கத்திலேயே முடிவு செய்து விட்டீர்களா ? முற்றிலும் குறை சொல்ல வேண்டுமென்றே எழுதப்பட்ட பதிவாகத்தான் தோன்றுகிறது பதிவர் சந்திப்பு தோல்வியில் முடிந்தது போலொரு பிம்பத்தை தோற்றுவிக்க நினைக்கிறீர்களா? வெற்றி தோல்வி என அறிவிக்க இது எக்ஸ்சாமோ எலக்சனோ , அல்ல உண்மையில் சொல்ல போனால் உலகெங்கிலும் உள்ள பதிவர்களை ஒன்றிணைத்து அவர்களோடு அளவளாவி ஒருவருக்கொருவர் தம்மை அறிமுகம் செய்துகொண்டு நம் சந்திப்பை அர்த்தப்படுத்தி மனதில் அழகான நினைவலைகளை தேக்கிவைத்து கொள்ளவே இச்சந்திப்பு

உங்கள் பார்வையில் பதிவர் சந்திப்பை பற்றி எழுதி உள்ளீர்கள் ...சந்தேகமே வேண்டாம் உங்களுக்கு பார்வையில் கொஞ்சம் குறை உள்ளது விரைவில் வாசன் ஐ கேரை தொடர்புகொள்ளவும், இந்த சந்திப்பை நடத்த நம் நண்பர்கள்  அனைவரும் பட்ட கஷ்டங்களை சொல்லில் சொன்னால் மட்டுமே மாளாது,
நீங்கள் ஒருமுறை அனுபவித்தால் மட்டுமே உங்களுக்கு புரியும் ஓரிடத்தில் நீங்கள் வெறும் பத்து பேரை ஒரு சின்ன சந்திப்புக்கு திரட்டி பாருங்கள், அப்போது தெரியும் கொஞ்சம் நஞ்சமல்ல நாக்கு தள்ளிவிடும்  
ஆனால் நம் நண்பர்கள் மெட்ராஸ் பவன் சிவா , ஆரூர் மூனா , அரசன், சீனு , செல்வின் , பிரபா , இன்னும் பெயர் தெரியாத நண்பர்களின் ஈடுபாட்டை நான் கடந்த ஒரு மாத காலமாக பார்த்து கொண்டுதானிருந்தேன் அதும் கடைசி இரு நாட்களில் அவர்கள் பம்பரமாய் சுழன்று வேலை பார்த்ததையும் நான் அருகில் இருந்து கவனித்தேன் அவர்கள் ஒரு குழு உணர்வோடு ஒரு வித அர்ப்பணிப்போடும் ஈடு பட்டதை எவராலும் மறுக்கவோ மறக்கவோ முடியாது ...
அவர்களுக்கு என்ன தேவை , அவர்களுக்கு இதிலென்ன லாபம் , அப்படி எல்லாம் கணக்கு பார்க்காமல் சந்திப்பை மிக சிறப்பாய் நடத்தி காட்டுவதிலேயே முனைப்பாக இருந்தார்கள் ..அதில்  வெற்றியும் பெற்று விட்டார்கள் (நன்றி என் நண்பர்களே ) அவர்களை பாராட்டி ஓரிரு வரிகள் கூட உங்களால் எழுத முடியவில்லையா என்ன ? அவர்கள் அருகில் இருந்து கவனித்து தானே இருப்பீர்கள் ..
அதை விடுங்கள் உணவு ஏற்பாடு பற்றி சொல்லவே இல்லை அது பிரமாதம் தானே .. அங்கே சாப்பிடும் நமக்கெல்லாம் குடிநீர் தந்த அக்காவிற்கு கூட ஒரு நன்றி சொல்லவில்லை நீங்கள் பெரிதாக குறை சொல்ல வந்து விட்டீர்கள் போங்க பாஸ்....

நீங்கள் சொல்லாமல் விட்ட குறையை நான் சொல்லவா நண்பா :
1.வடபழனி என்று சொன்னார்கள் நம்மை முருகன் கோவிலுக்கே கூட்டி போகவே இல்லை
2.மீட்டிங் நடந்த இடத்தில டிராபிக் ஓவர் இதனை விழாகுழுவினர் சரி செய்யவே இல்லை
3.அன்று பார்த்து வெயில் அதிகமாவே இருந்தது இதனை கூட திரு சூரிய பகவானிடம் விழா குழுவினர் முன்னமே எடுத்து சொல்லி அவரை ஆப் செய்து வைத்து இருக்கலாம் ஆனால் அவர்கள் செய்யவில்லை
4.பதிவர் சந்திப்பு நடந்த இடம் சென்னை வெகு தூரம்

இப்படி யாகபட்ட குறைகளை ஏன் நீங்கள் சொல்லவில்லை நண்பா கடுப்பு வருகிறது தானே எனக்கும் அப்படித்தான் உங்கள் பதிவினை படித்தபோது
 

மயிலன் நல்லதொரு கவிதையை வாசித்தார் அதை கைத்தட்டி ரசிக்ககூட ஆளில்லை...//
உண்மையில் மயிலன் கவிதைக்கு விழுந்த கைதட்டலின் ஓசையை நீங்கள் காதில் வாங்கி கொள்ளவில்லையென நினைக்கிறேன் ,

சந்திப்புக்கு வந்த அனைவரும் ஒத்துகொள்ளகூடிய இரண்டே குறை ஒன்று அரங்கம், மற்றொன்று போன வருடம் போல் அமரவைத்து உணவு பரி மாறி இருக்கலாம் என்பதே..அதை நம நண்பர்களிடத்தும் நாசூக்காய் சொல்லியும் விட்டார்கள் அதை அவர்களும் புன்னகையோடு ஏற்றுகொண்டார்கள் ....

நீங்கள் குறையன்று சொல்லும் விசயங்களை, உங்களை அவர்கள் ஆலோசனைக்கு அழைத்தபொது நீங்களும் சென்றிருந்து குறைகளே வராமல் உங்கள் ஆலோசனைகளை வழங்கி இருக்கலாமே? ஏன் செல்லவில்லை உங்கள் ஆலோசனையை சொல்லவில்லை ? சொல்லி இருந்தால் இப்படி ஒரு பதிவை உங்களால் போடவியலாது அல்லவா அதற்காகவே நீங்கள் போக வில்லையா

ஆட தெரியாதவன் தெரு கோணல் என்றானாம் என்ற பழமொழி உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன் முதலில் இப்படி பட்ட பழக்கத்தை விட்டு விடுங்கள் குறைகள் இருப்பின் அவர்களிடத்து சொல்லி இருக்கலாமே இதை ஒரு பதிவாக போட்டது உங்ககள் வியாபார உத்தியா? இது ஒரு வகையான மன நோய் நண்பரே.

தட்டி கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, குத்தி கிழிக்காதீர் நண்பா!! மல்லாந்து படுத்துக்கொண்டு எச்சில் துப்பாதிங்க அது உங்கமேலேயே பட்டுவிடும் கவனமாய் இருங்கள் ...இப்போதும் மட்டுமல்ல எப்போதும் குனிந்து எச்சில் துப்ப பழகி கொள்ளுங்கள்..

இது போலொரு பதிவை இனிமேல் தயவு செய்து எழுதாதீர்கள் ... அப்படி செய்வீர்களானால் உங்கள் முகத்தில் நீங்களே கரி பூசி கொண்டதாகிவிடும் .

நன்றி நண்பா


அன்புடன்
சசிமோகன் குமார் ...





Thursday, September 20, 2012

என் எண்ணச் சிதறல்கள் ....

என் காதலானவளே ...

நகமும் சதையுமாய்
இணைந்திருந்த நம் உறவு
இப்போதெல்லாம்
இலைமேல் நீர் துளியாய்
ஒட்டியும் ஒட்டாமலும் ..

பிரிவு
உன்னால் உன்டானதென்
நானும்
என்னால் உன்டானதென
நீயும்
எண்ணி எண்ணியே
தொலைத்துவிட்டோம்
நம் பிரியமான காதலை


பிரிவுக்கு
உன்மேல் பழி சொல்ல நானும்
என் மேல் பழி  சொல்ல நீயும்
நம் மேல் பழி சொல்ல நம் காதலும்
காத்திருகிறது ..

பிரிவின் வலி அறிந்திருப்போம்
இருவரும்
இனியாவது பிரியாமல்
வாழ்ந்திருப்போம்  வா


பேசிப் பேசித்தான்  இருவரும்
காதல் கொண்டோம்
வா மீண்டும் பேசி பேசியே
பிரிவை "கொல்வோம்" வா

சண்டையிட்டது யார் உன்
பிரியமானவன் தானே என்று
நீயும்

சண்டையிட்டது யார் என்
பிடித்தமானவள்  தானே என்று
நானும்
சமரசம் செய்து கொள்வோம் வா ..


மௌனம் என்ற ஆடை போர்த்தி
இன்னும் எத்தனை நாளைக்குதான்
உன் செவ்விதழை மூடி வைப்பாய்
என்னை திட்டவாவது
உன் மௌனம் கலைத்துவிடு  அன்பே

வா பிரிந்து இருந்த காலத்திற்கும்
சேர்த்து காதல் செய்வோம்
வா ...வா .....

கிறுக்கல்கள் .....
சசி எம் குமார் .......

Tuesday, September 18, 2012

தமிழ் கூறும் பதிவுலகிற்கு ....


பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம் ...

எனக்கு நெடு நாள் ஏக்கம் உங்களை போல் நானும் பதிவுகள் இட ..
என்னையும் உங்களோடு இணைத்து கொள்ள ..
என்னையும் வரவேற்கும் அனைவருக்கும் என் முதற்கன் வணக்கம் ...
நேசமுடன் கை கோர்த்து கொள்கிறேன் உங்களுடன் நான் .....

என்றும் அன்புடன் 

சசி மோகன் குமார் ....